-வடக்கின் இனப் பரம்பலை மாற்றும் எனவும் எச்சரிக்கை-
-இ.கலைஅமுதன்-
வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான ‘கிவுல் ஓயா’ திட்டத்தை கடுமையான எதிர்ப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சி, பாரிய மக்கள் போராட்டங்களை நடத்துவதற்காக பிரதயத்தனம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கட்சியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த திங்கட்கிழமை 20ஆம் திகதி அமைச்சரவை மாகாவலி கிபுல் ஓயா திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இத் திட்டம் எப்படியாக இனப்பரம்பலை மாற்றியமைக்கும் என்பதையும், தமிழ் மக்களின் உரிமைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதையும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெளிவாக விளக்கியுள்ளனர்.
இந்த திட்ட அமுலாக்கலை தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை நாம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் வவுனியாவிலும் நடாத்த உள்ளோம்.
இவற்றிலும் கலந்துகொண்டு உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து இப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்குமாறு சகலரையும் அன்பாக கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிஞானம், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மகாவலி (எல்) வலயம் என்ற பெயரில் மகாவலி தண்ணீர் கொண்டுவராமலே குடியேற்றங்கள் செய்யப்படும் நிலையில், இப்போது கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டுவரப்படுவது, திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும், வடக்கின் இனப் பரம்பலை மாற்றும் உள்நோக்கங்களை கொண்டது என்பதை நாம் உறுதியாக கூறுவோம்.
முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் மீள்குடியேற முடியவில்லை, அந்த மக்களின் குடியிருப்பு நிலங்கள், விவசாய நிலங்கள் இன்றளவும் விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் கிவுல் ஓயா திட்டம் ஊடாக அந்த மக்களின் காணிகள் நிரந்தரமாக பறிபோகும் அபாயமும் உள்ளது என்றார்.


















