-கஜிந்தன்-
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வன ஜீவராசி திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தகவல் வழங்கியுள்ளதாக காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பல ஏக்கர் தனியார் காணிகள் உட்பட அரச காணிகளும் வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றால்; சட்டத்துக்கு முரணாக கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்குமாறு மக்களால் பல தடவைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் உட்பட பல கூட்டங்களில் கோரிக்கை விடுக்கபட்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திடம் நான் கோரிய தகவலுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என அவர்கள் பதில் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு விபரம் எதுவும் இல்லை என குறிப்பிடப்படுவது வியப்பாகவுள்ளது என்றார்.
















