-வட மாகாண ஆளுநர் கோரிக்கை-
-கஜிந்தன்-
நெடுந்தீவு இறங்குதுறை புனரமைப்புக்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அந்நாட்டு தூதுவர் வீபே டி போரிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற போதே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ½ மணி நேரத்துக்க மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் நெதர்லாந்து தூதுவர்,கடந்த காலத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைக்கு, தற்போது வருகை தரும் சுற்றுலாவிகளை விடவும் அதிகளவானவர்களை ஈர்க்க வேண்டும் என விருப்பம் வெளியிட்டார்.
அத்துடன் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம் மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவமனைகளை முழு அளவில் இயங்கச் செய்வதற்குத் தடையாக உள்ள சவால்கள் குறித்தும் தூதுவர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில்’ தான் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கொழும்பிலிருந்து வடக்கை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்ந்துள்ளமை ஒரு சிறப்பான மாற்றமெனவும் குறிப்பிட்ட தூதுவர்,பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை வடக்கின் அபிவிருத்திக்குச் சாதகமான சமிக்ஞை எனவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் ஆளுநர், உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணக் கோட்டையை மையப்படுத்திய சுற்றுலா மேம்பாட்டுக்கான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திலிருந்து விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றை இங்கேயே பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகளே எமக்கு அவசியமாகின்றது.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவதாகவும் தூதுவரிடம் குறிப்பிட்டார்.


















