-இனக் கோலத்தை மாற்றியமைக்கும் சதி முயற்சி-
-ஆராய்வு கூட்டத்தில் ரவிகரன், சத்தியலிங்கம் காரசாரம்-
-வி.சரவணன்-
மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா நீர்த்தேக்க கட்டுமானத் திட்டத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் பாதகமாக இருக்கின்ற கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர் கே.டீ.லால்காந்த மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல்ரத் நாயக்க ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டுகின்றவகையிலும், திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடலாக இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.
அந்தவகையிலே இந்த கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதகத் தன்மைகள் தொடர்பில் எடுத்துக்கூறி நானும், வைத்தியர் சத்தியலிங்கமும் இத் திட்டத்தினை மிகக் கடுமையாக எதிர்த்தோம்.
இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர்களது இனப்பரம்பல் கோலம் மற்றியமைக்கப்படுவதுடன், தமிழர்களது பூர்வீக தொல்லியல் சான்றுகளும் அழிக்கப்படுமென்பதைச் சுட்டிக்காட்டினோம்.
இதுதவிர சுற்றுச்சூழல் பாதிப்பு நிலைகள் ஏற்படும் அபாய நிலைகள் இருப்பதையும் இதன்போது மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் கிவுல் ஓயா
குறிப்பாக இந்தக் கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தினை செயற்படுத்தினால் வவுனியா வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் பூர்வீக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக்குளங்களும், அவற்றின் கீழான வயல்காணிகளும், வெடிவைச்சகல்லு குளத்தின்கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதிபோன்ற தமிழ் மக்களின் பூர்வீக குளங்களும், வயல்நிலங்களும், கிராமங்களும் நீரேந்துப்பகுதிகளுக்குள் மூழ்கிப்போகும் என்பதைச் சுட்டிக்காட்டினோம்.
இவ்வாறாக தமிழ் மக்களை அவர்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, குடியேற்றப்பட்ட 6000 பெரும்பான்மையினக் குடும்பங்களை வலுப்படுத்தி தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தினை மாற்றியமைக்கும் இவ்வாறான திட்டங்களை ஒருபோதும் எம்மால் அனுமதிக்கமுடியாதென எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிவுல் ஓயாத்திட்டத்தில் கருத்திலெடுக்கப்படாத சுற்றுச்சூழல் பாதிப்பு
இந்த கிவுல் ஓயாத் திட்டத்திற்காக வவுனியா பெரிய கட்டுக்குளம் பகுதியிலுள்ள பாரிய ஒதுக்கக் காடுகள் அழிக்கப்படவுள்ளன.
அத்தோடு கொக்குத்தொடுவாயிலுள்ள கிரிபன்வௌ என்று பெயர் மாற்றப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக ஆமையன் குளத்திற்கு நீரை நகர்த்துகின்றபோது 2500 ஹெக்டெயர் காடுகள் அழிந்துவிடுமென சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இத்திட்டத்தினை அண்மித்த புதிய குடியேற்றங்களுக்காக 1500 ஹெக்டெயர் அளவிலான வாழ்விடத்தினை வனஜீவராசிகள் இழப்பதால் மனித – யானை மோதல்கள் மற்றும் ஏனைய வனஜீவராசிகளுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடையுமென வனஜீவராசிகள் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளதாக இந்த கிவுல் ஓயாத் திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்புத்தொடர்பில் அவதானம் செலுத்துகின்றபோது இத்திட்டத்தின் நேர்மறையான முடிவுகளைவிடவும் எதிர்மறையான தாக்கங்களே அதிகமாக இருக்கின்றன என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம்.
வன்னிக்கும் தமிழர்களுக்குமான வரலாற்றுத் தொடர்பை விழுங்கப்போகும் கிவுல் ஓயா
மேலும், கிவுல் ஓயாத்திட்டத்தினைச் செயற்படுத்தினால் நீரேந்துப்பகுதிக்குள் 47 தொல்லியல் இடங்கள் மூழ்கிப் போகும் அபாயநிலை ஏற்படும்.
தமிழர்களின் பூர்வீகத்தை பறைசாற்றும் வன்னி இராட்சியத்துடன் தொடர்புடைய வரலாற்றுத் தொன்மங்கள் கிவுல் ஓயாத்திட்டத்தில் மூழ்கிப்போகும் நிலையில் காணப்படுகின்றன. என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, தமிழர்களுக்கும் வன்னிக்குமிடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்பினை நீரில் மூழ்கச்செய்கின்ற இத்திட்டத்தினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதென்ற எமது கருத்துக்களை இதன்போது தெரிவித்திருந்தோம் என்றார்.


















