-த.சுபேசன்-
கனிமவளத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றில் பணிபுரிகின்ற தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாக காணப்படுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தென்மராட்சிப் பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெறுகின்ற கல் அகழ்வு நடவடிக்கை தொடர்பில் கருத்துத் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்:
கனிமவளத் திணைக்களம் கொடுக்கும் அனுமதிகள் சிலவற்றை வைத்தே பாரிய அளவில் தவறான செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
தென்மராட்சியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கல் அகழ்வு தொடர்பில் கனிமவளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதில் நாம் சந்தேகப்பட வேண்டும்.
வடக்கில் நூறு சதவிகிதம் இவ்வாறான திணைக்களங்கள் கொடுக்கும் அனுமதிகளுடனேயே தவறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தமிழ் உத்தியோகத்தர்கள் தான் இடம் கொடுக்கின்றனர்.சிங்களவர்கள் இல்லை என மேலும் தெரிவித்தார்.


















