இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த நினைவு நிகழ்வில் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள காந்தியின் நினைவுத்தூபிக்கு இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி மலர் மாலை அணிவித்து நினைவு கூர்ந்தார்.
வாழ்நாள் பேராசிரியர் மோகன்தாஸின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் சொல்லருவி லலீசன், மறவன்புலவு சச்சிதானந்தம், காந்தி சேவா நிலைய அங்கத்தவர்கள், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது காந்தி சேவா நிலையத்தினால் காந்தியவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்து வருடா வருடம் வெளியிடப்படும் காந்தியம் பத்திரிகை இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பத்திரிகையினை வடமாகாண ஆளுநர் வேதநாயகன் வெளியிட்டு வைத்து காந்தி நினைவுக்கு வந்திருந்தவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இதன் போது உரையாற்றிய யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக தூதுவர் சாய் முரளி, காந்தியின் உண்மை, சத்தியம், அவரின் வாழ்க்கை தத்துவங்கள், கோட்பாடுகள் தற்போது உள்ளவர்களுக்கு தேவையான ஒன்றாக காணப்படுவதுடன் உலகத்தில் வாழும் இந்த உயிரினங்கள் மற்றும் மக்கள் அவர்களின் வழிகளை பின்பற்றி சத்தியத்தின் நேர்மையில் வாழ்வது சிறந்தது என உதாரணமாக தெரிவித்தார்.
காந்தி இறக்கும் வரை சத்தியம், நேர்மை ஆகியவற்றை கடைப்பிடித்து வாழ்ந்ததே அவரை நாங்கள் அனுஷ்டிக்க காரணம். வாழ்க்கையில் எந்த ஒரு துன்பம் வந்தாலும் சத்தியம், உண்மை ஆகியவற்றை நாங்கள் கைவிடக்கூடாது என்றும் இறுதிவரை தர்மமே நிலை வரும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.


















