-க.கனகராசா-
வடமராட்சி கிழக்கு மணற்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி மற்றும் குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் கோல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதற்காக 300 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அம்மையத்தை அமைக்கவுள்ள தனியார் நிறுவனம் மேற்படி கிராம மக்களுடனான கலந்துரையாடலை மணற்காட்டில் நேற்று நடத்தியது.
இதன் போது குறித்த தனியார் நிறுவனத்தால் மக்களிடம் காணியை பெற்றுக்கொள்வதற்கான விருப்பம் கோரியபோது குறித்த பிரதேச மக்களால் தமது கிராம சூழலில் காணிகளை வழங்க முடியாது என திடமாக தெரிவித்தனர்.
இது குறித்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச மக்கள:;
தமது மணற்காடு கிராமத்தில் தற்போது 450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இதில் 150 பேருக்கு மேற்பட்ட குடும்பங்கள் காணி இல்லாமல் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர். தமது கிராமத்தை சூழவுள்ள பகுதியில் 156 ஏக்கர் காணி மட்டுமே உள்ள நிலையில் எமது கிராமத்தில் காணி இல்லாதோருக்கே காணிகள் வழங்க அரச காணிகள் போதாது.
இதனாலேயே எமது எதிர்கால சந்ததிகளின் நலன்கருதி குறித்த பகுதியில் காணிகள் வழங்க முடியாது என தெரிவித்தோம் என்றனர்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தனியார் நிறுவனத்திடம் கேட்டபோது, மக்கள் ஏதிர்க்கின்றனர். இதனால் மக்களின் எதிர்ப்பை மீறி தமது கோல்வ் மைதானத்துடன் கூடிய பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மைய்யங்கள் அமைக்கும் பணியை தொடர போவதில்லை என குறிப்பிட்டனர்.


















