-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு-
-த.அம்பிகாவதி-
வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல் வேறு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அரிசியாக மாற்றப்பட்டு மீண்டும் எமது மாகாணத்துக்கே விற்பனைக்கு வருகின்றது. இதனால் எமது விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையை மாற்றியமைத்து, எமது நெல்லை எமது மாகாணத்திலேயே அரிசியாக்கி விநியோகிப்பதற்கு தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை ஆலைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திலுள்ள தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள் அரச மற்றும் தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்கள் ஆகியோருடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எமது மாகாணத்தின் தேவைக்கு மேலதிகமாகவே நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. உபரியான நெல்லை வெளியே அனுப்புவதில் தவறில்லை. ஆனால், எமது மக்களின் தேவைக்கான நெல்லையும் வெளியே அனுப்பி விட்டு, அதையே மீண்டும் அரிசியாக அதிக விலைக்கு வாங்குவது ஆரோக்கியமானதல்ல. உள்ளூர் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு போதிய கடன் வசதிகளை வழங்கி, அவர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்யவும், அதனை இங்கேயே அரிசியாக மாற்றவும் நாம் முயற்சிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


















