-காலத்தின் கட்டாயம் என ஆளுநர் தெரிவிப்பு-
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்துக்கென ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும், இதனால் அக்காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வு காண்பதற்காக ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டு உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் கிளையை நிறுவுவதற்கான முயற்சிகளை நான் மாவட்ட செயலாளராக பணிபுரிந்த போது மேற்கொண்டிருந்தேன். முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடமொன்று அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என ஆளுநர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா முல்லைத்தீவில் எமக்கு ஒதுக்கப்பட்ட காணியில் செயற்பாடுகளை ஆரம்பிக்க நாம் தயாராகவே உள்ளோம். எனினும், போதிய நிதி ஒதுக்கீடுகள் இன்மை காரணமாகவே தாமதம் ஏற்பட்டது என்றார்.
இதற்குத் தீர்வாக, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியிலிருந்து, பல்கலைக்கழகத்தின் ஆரம்பக்கட்ட கட்டுமானப் பணிகளுக்காக ஒரு தொகுதி நிதியை வழங்குவதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிப்பதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் உறுதியளித்தார்.
பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 44 ஏக்கர் காணிக்குரிய எல்லைகளை உடனடியாக அளவீடு செய்து, வேலி அமைக்கும் பணிகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் ஆரம்பிக்கும் எனத் துணைவேந்தர் உறுதியளித்தார்.
வேலி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட செயலகம் வழங்கும் நிதி உதவியுடன் படிப்படியாகக் கட்டட நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.


















