-பங்குகொள்ள தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய பேரவை அழைப்பு
-கஜிந்தன்-
அரசாங்கம் கொண்டுவரவுள்ள ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக சமஸ்டி தீர்வை ஒரேகுரலில் முன்வைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தமிழ்த் தேசிய பேரவையால் நாளை இளங்கலைஞர் மண்டபத்தில், முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் தமிழ் தேசிய பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இனப்பிரச்சினைக்கான நிலையான அரசியல் தீர்வாக, தமிழ் மக்கள் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து சமஸ்டித் தீர்வை வலியுறுத்தி ஆணை வழங்கி வந்துள்ளனர். இருப்பினும், அக்கோரிக்கையினைப் புறக்கணிக்கும் வகையில், கடந்த 2015 மற்றும் 2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியல் யாப்பு வரைபை நாட்டிற்கான புதிய அரசியல் யாப்பாக கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், நாட்டின் உயர் தலைவர்கள் பல முக்கிய சந்தர்ப்பங்களில் குறித்த அரசியல் யாப்பை நிறைவேற்றும் செயற்பாடுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில்,ஒற்றையாட்சி யாப்பு வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக, சமஸ்டி அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரசின் மீது உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டங்களில் அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
இது தொடர்பாக அரசியல் தரப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து பொது இணக்கப்பாட்டிற்கு வருதல் அவசியம். இம் முயற்சியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பங்களிப்பு இன்றியமையதது .எனவே இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு தங்களது ஒத்துழைக்குமாறு கோருகின்றோம் என்றுள்ளது.


















