-கஜேந்திரகுமார் காட்டம்-
-கலந்துரையாடலுக்கு மக்களை அழைக்காதது ஏன்?-
-யாழ்.மாவட்ட செயலரை மிரட்டுகிறார் பௌத்த காங்கிரஸ் தலைவர்-
தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை ஒடுக்குவோம் என கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள் திஸ்ஸ விகாரை விடயத்தில் நடவடிக்கை எடுக்க அஞ்சுவது வேடிக்கை, என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், துணிந்து நடவடிக்கை எடுங்கள் எனவும் கூறினார்.
நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தையிட்டி காணிகள் தனியாருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டு, அதனை விடுவிக்கவேண்டும் என கூறப்படும் நிலையில் அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவராக உள்ள, ஓய்வுநிலை பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த நபர், யாழ்.மாவட்டச் செயலரை அச்சுறத்தும் வகையில் கடிதம் எழுதியுள்ளார்.
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. புத்தசாசன அமைச்சின் உறுப்பினர்களும் வேறு அரசாங்க அதிகாரிகளும், சட்டவிரோத விகாரையின் விகாராதிபதியும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் அந்த கலந்துரையாடலுக்கு சட்டவிரோதமாக காணிகள் பறிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் அழைக்கப்படவில்லை. இது நீதியான முயற்சியாக இருக்கும் என்று நினைக்கவில்லை.
திஸ்ஸ விகாரை புத்தசாச அமைச்சுக்கோ, வேறு எந்த அரசாங்கத்தின் அமைச்சுக்கோ தெரியாமல் அனுமதி இன்றி இராணுவத்தினரால் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதாகும். இது மயமாக்கல் மனோநிலையில் இருந்து கட்டப்பட்டதாகும். இப்போது அந்த காணி தனியாருடையது என்ற நிலையில், அவசரமாக விடுவிக்க வேண்டும் என்று சொல்லப்படும் நிலையில், அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் தலைவரால் யாழ். அரச அதிபரை அச்சுறுத்தும் வகையில் கடிதம் எழுதப்படுகின்றது. இந்த விகாரைக்கும் பௌத்த மதத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இனவாத கோணத்தில் இது நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த விடயத்தை சுட்டிக்காட்டியும் பாதிக்கப்பட்டவர்களை அழைக்காமல் இரகசியமாக கொழும்பில் கலந்துரையாடல் நடத்துவது எந்த வகையில் நியாயமானது?
நீங்கள் இவ்வாறான அநியாயத்தை செய்ய வேண்டாம். தமிழருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதாக கூறி ஆட்சிக்கு வந்தீர்கள். திஸ்ஸ விகாரை விடயத்தில் துணிந்து தீர்மானங்களை எடுக்கலாம். இதனை விடுத்து மோசமான செயற்பாடுகளுக்கு விலைபோக வேண்டாம் என்றார்.


















