-கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினரின் முறையீடு தொடர்பில் அரச அதிபருக்கு தெரிவித்த ரவிகரன் எம்.பி-
-வி.சரவணன்-
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப் பிரிவில் தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கோட்டைக்கேணி பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்தியதுடன், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப் பிரிவிலுள்ள கூமாவடிக்கண்டல், நாயடிச்சமுறிப்பு, கன்னாட்டி, அக்கரைவெளி உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
குறிப்பாக தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல் நிலங்களின் குறுக்காக இவ்வாறு யானைவேலிகள் அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் காணிகளையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான ஒரு உத்தியாகவே இவ்வாறு தமது வயல் காணிகளின் குறுக்காக மகாவலி அதிகாரசபை யானைவேலி அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
அதேவேளை கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள கோட்டைக்கேணி பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று கமக்காரஅமைப்பு பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குசென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


















