இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எட்டு கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகம் ஆகியன அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று முன்தினம் நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் நியூ ஸ்டார் கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் நாவாந்துறை சென் மேரிஸ் கழகம் வெற்றிகொண்டது. ஆரம்பம் முதல் கடைசிவரை இரண்டு அணியினரும் மிகத் திறமையாக விளையாடி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தினர்.
போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் ஜொன் லவானி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு சென். மேரிஸ் அணியை முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து நியூ ஸ்டார் கழகம் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தது.
நியூ ஸ்டார் கழக வீரர்கள் இருவர் கோல் போட எடுத்த முயற்சிகள் கோல்காப்பின் குறுக்குக் கம்பத்தில் பட்டு திசை திரும்பின.
இடைவேளையின்போது சென். மேரிஸ் கழகம் 1 – 0 என முன்னிலையில் இருந்தது. இடைவேளைக்குப் பின்னர் நியூ ஸ்டார் வீரர் மொஹமத் தில்ஹாம் 49 ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் வெற்றி கோலைப் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.
56 ஆவது நிமிடத்தில் ஜே. ஜெரின்சன் தலையால் முட்டி அருமையான கோல் ஒன்றைப் போட்டு சென். மேரிஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார். அதன் பின்னர் இரண்டு அணியினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். ஆனால், இறுதியில் சென். மேரிஸ் கழகம் 2 – 1 என வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
ஜாவா லேன் கழகத்துக்கும் தர்காநகர் சுப்பர் சன் கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் ஜாவா லேன் கழகம் 16 – 15 என்ற பெனல்டி முறையில் வெற்றியீட்டி அரை இறுதிக்கு முன்னேறியது.


















