-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்-
-த.அம்பிகாவதி-
எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியோடும். கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே திட்டமிடப்பட்ட அழிப்புக்களை முறியடித்து நாம் உலக அரங்கில் தலைநிமிர முடியும்.
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வின் பிரதம விருந்தினரும், அப்பாடசாலையின் பழைய மாணவனுமான சிவஞானம் சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போருக்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தேசிய இனம் பல்வேறு நூதனமான மற்றும் திட்டமிடப்பட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களின் இருப்பையும், அடையாளத்தையும் சிதைப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எமது எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களைச் சீரழிப்பதன் ஊடாக, ஒரு பலவீனமான சமூகத்தை உருவாக்கும் முயற்சிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
நாம் இந்த மண்ணின் பிள்ளைகள். நமக்கென்று ஒரு வீரம் மிக்க வரலாறும், தனித்துவமான பண்பாட்டு அடையாளமும் உண்டு. அந்த வரலாற்றை உள்வாங்கியவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்.
அந்நிய சக்திகளின் சீரழிவுத் திட்டங்களுக்கு இரையாகாமல், உயர்ந்த ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிப்பதே எமது மிகப்பெரிய பலமாகும். வெறும் புத்தகக் கல்வியோடு மட்டும் நின்றுவிடாமல், அறம் சார்ந்த வாழ்வியலை மாணவர்கள் பற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ் தேசிய இனத்தின் எதிர்காலத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமை மிக்க தலைவர்களாக உங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















