-சொ.வர்ணன்-
யாழ்.வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் சுற்றுலா சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காங்கேசன்துறை குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மணற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த பொதுமகன்கள் சிலருக்கும் அங்கிருந்த பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகி, பின்னர் அது மோதலாக மாறியதாகவும், சம்பவத்தின்போது பொலிஸார் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய 8 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


















