-கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார்-
-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை மக்களிடம் கையளித்துவிட்டு உடன் வெளியேற வேண்டுமென கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கட்டைக்காடு- கேவில் பகுதியில் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை நேற்று பார்வையிட்ட பின்பே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் அறிந்தவரை குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை. முதல் தடவையாக காட்டுயானைகள் வந்து பெருமளவான தென்னைகளை நாசம் செய்துள்ளன. ஆகவேதான் அதனை பார்வையிட பங்குத்தந்தை என்னும் ரீதியில் இங்கே வருகை தந்துள்ளேன.;
இதெல்லாம் எங்கள் மக்கள் காலாகாலம் வாழ்ந்த அவர்களுடைய பூர்வீக காணிகள். மக்கள் தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காணிகளை எல்லாம் தேசிய பூங்கா என்று கூறி கடந்த கால அரசாங்கங்களும் தற்போதைய அரசாங்கமும் அடையாளப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்கின்ற ஒரு கைங்கரியத்தை தான் இங்கே செய்து கொண்டிருக்கின்றன.
இந்தப் பிரதேசத்திற்கும்,வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை
இங்கே காட்டு விலங்குகள் இல்லை, அடர்ந்த காடுகள் இல்லை, இந்த பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய பகுதி என்று கூறிக் கொள்வதற்கான எந்த சான்றுகளும் இல்லை. கிராம மக்களுக்கு எழுகின்ற சந்தேகம் எனக்கும் இருக்கின்றது. இந்தப் பகுதிக்குள் யானைகளை திட்டமிட்டு கொண்டு வந்து விட்டு யானைகள் வசிக்கின்ற இடம் இது, தேசிய பூங்கா என ஊர்ஜிதம் செய்வதற்காக இந்த காரியங்களை இவர்கள் செய்திருக்க கூடும்.
அவ்வாறு பெருங்காட்டில் இருந்து வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட 36 கிலோ மீற்றர்களை தாண்டி வருகை தர வேண்டும் ஆனால் தற்போது யானைகள் வரக்கூடிய இடம் பாரிய தண்ணி நிறைந்த இடமாக காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் போது இந்த யானைகள் எவ்வாறு இங்கே வருகை தந்தன?
சம்பந்தமே இல்லாமல் மக்களுடைய பூர்வீக காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் மக்களுடைய காணிகளை உடனடியாக கையளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















