-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன்-
-பா.பிரதீபன்-
ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களுடான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்களை மீண்டும் வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு வடமாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஆசிரியர்கள்; தங்களுடைய இடமாற்ற கோரிக்கை தொடர்பான மேல்முறையீட்டை கல்வி திணைக்களத்திற்கு அனுப்பி இருக்கின்ற போதிலும் அவை எதனையும் பரிசீலனை செய்யாது தாம் சொல்லுவதை மாத்திரமே நீங்கள் செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்குடன் மாகாண கல்வி திணைக்களம் நடந்து கொள்வதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கா விட்டால் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்னார் தீர்வு கிடைக்கும் வரை நாளையில் இருந்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.


















