-ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு-
-த.அம்பிகாவதி-
நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளதால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளதாக குறித்து ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச்சுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் பொருளாதார நிலையை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் அவர்களுக்கான புதிய வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை உருவாக்குவதன் ஊடாக, இங்குள்ள வளங்களை முறையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தைச் சீரமைப்பது குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில்,நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாரிய நிர்வாக இடைவெளி மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்கள் குறித்து ஐநாவின் வதிவிடப் பிரதிநிதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் மாகாண சபை தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதிகாரப் பரவலாக்கல் சிதைவடைந்து, நிர்வாகக் கட்டமைப்புகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதையும் அவர் ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டினார்.


















