–
அ.அன்பழகன்
–
நிலவை நோக்கிய இந்தியாவின் பயணம், ‘அமிர்த காலத்திற்கான’ விண்வெளித் தொலைநோக்கு மற்றும் விண்வெளித்துறையைத் தனியாருக்குத் திறந்துவிட்டமை ஆகியவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிறுவன ரீதியான மீண்டெழும் தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு ஆகியவை எவ்வாறு இலட்சியமிக்க தேசிய இலக்குகளை அசாதாரண சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்து வருகின்றன.
2023 ஆகஸ்ட் 23 அன்று நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கியது என்பது வெறும் தொழில்நுட்ப மைல்கல்லுக்கும் அப்பாற்பட்டதாகும். இது தேசியத் தொலைநோக்கு, அரசியல் தலைமைத்துவம், நிறுவன அர்ப்பணிப்பு, விஞ்ஞானிகளின் உறுதிப்பாடு மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் கூட்டு முயற்சி ஆகியவற்றின் ஒன்றிணைப்பைப் பிரதிபலித்தது.
தனிநபர் அபிலாஷைகள் பகிரப்பட்ட தேசியப் பணியாக மாற்றப்படும்போது அசாதாரண சாதனைகள் சாத்தியமாகும் என்ற தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கியக் கோட்பாட்டை இது நிரூபித்தது.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்துடன் நெருக்கமாக இணைந்திருந்தவன் என்ற வகையில், சந்திரயான்-3 வெற்றியை ஒரு தனிப்பட்ட வெற்றியாக நான் பார்க்கவில்லை. மாறாக, பல தசாப்தகால நிறுவனக் கட்டமைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விடாமுயற்சியின் விளைவாகவே பார்க்கிறேன். இது குறிப்பாகப் பாரிய தேசியத் திட்டங்களில் தலைமைத்துவம் குறித்த மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது.
1960-களின் முற்பகுதியில் மிகவும் குறைந்த வளங்களுடன் இந்திய விண்வெளித் திட்டம் தொடங்கப்பட்டது. 1962-இல் ‘இன்கோஸ்பார்’, 1969-இல் ‘இஸ்ரோ’ மற்றும் 1972-இல் விண்வெளித் துறை ஆகியவை நிறுவப்பட்டமை தேசிய விண்வெளித் திறனுக்கான அடித்தளத்தை அமைத்தன. தும்பாவில் சிறிய ரக ஏவுகணைகளை ஏவியதிலிருந்து, அதிநவீன விண்கல ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் மற்றும் கிரகங்களுக்கு இடையிலான பயணங்கள் வரை இந்தியா தனது தொழில்நுட்பத் திறன்களைத் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம் கட்டியெழுப்பியுள்ளது.

இத்தகைய பயணத்திற்கு விஞ்ஞானச் சிறப்பு மட்டும் போதாது நீண்டகாலத் தொலைநோக்கை உருவாக்கி, நிறுவன நம்பிக்கையை நிலைநிறுத்தும் தலைமைத்துவமும் அவசியமாகும். அமிர்த காலத்திற்கான ஒரு இலட்சிய இலக்காக இந்தியாவின் ‘விண்வெளித் தொலைநோக்கு 2047’ பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டமை ஒமுக்கியமான தலைமைத்துவத் தருணமாகும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புதல், ‘பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்’ அல்லது ‘இந்திய விண்வெளி நிலையம்’, அதிநவீன பாரம் சுமக்கும் மற்றும் மீள்பயன்பாட்டு ஏவுகணைகள், விண்வெளியில் தொடர்ச்சியான மனித இருப்பு மற்றும் இந்தியர் நிலவில் தரையிறங்குவது உள்ளிட்ட பரந்துபட்ட ஆய்வுகளை உள்ளடக்கிய நீண்டகாலக் கட்டமைப்பைக் கொண்டதாகும்.
ஆரம்பகட்டத் திட்டங்களுக்கு நிதி அனுமதி வழங்கப்பட்டமையும் இதேயளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க முடிவாகும். அதேநேரம், முக்கியமான தலைமைத்துவ முடிவு, இந்திய விண்வெளித் துறையைத் தனியார் பங்களிப்புக்குத் திறந்துவிட்டதும், அதனைத் தொடர்ந்து 2023-இல் ‘இந்திய விண்வெளிக் கொள்கை’ வெளியிடப்பட்டமையுமாகும்.
இஸ்ரோ ஒரு வெற்றிகரமான தேசிய நிறுவனமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இளம் தொழில்முனைவோரும் புத்தாக்குநர்களும் இத்துறையில் நுழைய விரும்பினர். விண்வெளி நடவடிக்கைகளின் எதிர்கால விரிவாக்கத்திற்கும் பொருளாதாரத் தாக்கத்திற்கும் ஒரு அரசாங்க நிறுவனத்திற்கு அப்பாற்பட்ட திறன்கள் தேவை என்பதை உணர்ந்து, இந்தச் சீர்திருத்தங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கின.
இதன் நோக்கம் இஸ்ரோவின் பங்கைக் குறைப்பதல்ல. மாறாகத் தொழில்துறை, புத்தாக்கத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பங்களிக்கச் செய்வதன் மூலம் கூட்டுத்திறனை விரிவுபடுத்துவதாகும். 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 440 விண்வெளித் தொழில்நுட்பப் புத்தாக்கத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை இந்த ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது.

சந்திரயான்-2 மற்றொரு முக்கியமான தலைமைத்துவப் பாடத்தை வழங்குகிறது. 2019 செப்டெம்பரில் அதன் தரையிறங்கும் முயற்சி எதிர்பார்த்த மென்மையான தரையிறக்கத்தை அடையவில்லை. ஆயினும், அதற்கான எதிர்வினை அந்த இலட்சியத்தைக் கைவிடுவதாக இருக்கவில்லை.
அத்திட்டம் ஆராயப்பட்டு, குறைபாடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தரையிறங்கும் அமைப்பின் உறுதித்தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சந்திரயான்-3 திட்டத்தில் மேம்பாடுகள் இணைக்கப்பட்டன.
தோல்வியைத் திறந்த மனதுடனும் விஞ்ஞான ஒழுங்குடனும் அணுகினால், அது நிறுவன ரீதியான கற்றலுக்கான ஒரு ஆதாரமாக மாறும் என்பதைச் சந்திரயான்-3 காட்டியது.
சந்திரயான்-3 தரையிறங்கும் நாளில் பிரதமர் மோடி பங்கேற்றமையும், திட்டக் குழுவினருடன் கலந்துரையாடியமையும் இந்தச்சாதனைக்குப் பரந்த பொதுமக்கள் முக்கியத்துவத்தைக் கொடுத்தது. பெண் விஞ்ஞானிகள் மற்றும் திட்டத் தலைவர்கள் உட்பட விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், தேசியச் சாதனைகள் ஒவ்வொரு நிறுவன மட்டத்திலும் உள்ள கூட்டு முயற்சியாலேயே கட்டியெழுப்பப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தியது.
சந்திரயான்-3 வெற்றிக்குப் பின்னால் பிரம்மாண்டமான நிறுவன ரீதியான முயற்சி இருந்தது. இங்குதான் நிறுவனத் தலைமைத்துவம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு தலைவரின் பங்கு என்பது ஒவ்வொரு தொழில்நுட்பக் கேள்விக்கும் பதிலளிப்பதல்ல.
மாறாகச் சரியான கேள்விகள் கேட்கப்படுவதற்கும், தொழில்நுட்ப ரீதியான மாற்றுக்கருத்துக்கள் ஊக்குவிக்கப்படுவதற்கும், ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கும், திறமையான குழுக்களுக்குப் பொறுப்புகளை ஏற்க அதிகாரம் அளிக்கப்படுவதற்குமான சூழலை உருவாக்குவதாகும். பிரச்சினைகள் அச்சமின்றித் தெரிவிக்கப்பட வேண்டும்,
மேலும் ஒவ்வொரு மட்டத்திலும் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும். அதிகாரத்தை அதிகப்படியாக மையப்படுத்துவது முடிவுகளைத் தாமதப்படுத்தும்; அதேவேளை பொறுப்புக்கூறல் இல்லாத அதிகாரப் பரவலாக்கல் முயற்சிகளைச் சிதறடித்துவிடும். வெற்றிகரமான திட்டத் தலைமைத்துவத்திற்கு இவ்விரண்டிற்கும் இடையிலான சமநிலை அவசியம்.
செயற்பாட்டு ரீதியான தலைமைத்துவமும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், தர உறுதிப்படுத்தல் பணியாளர்கள், தொழில்துறை கூட்டாளர்கள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஆகியோரே ஒரு திட்டத்தின் நம்பகத்தன்மையைத் தீர்மானிக்கின்றனர். இளம் வல்லுநர்கள் புதிய யோசனைகளைக் கொண்டு வருகின்றனர்; அனுபவம் வாய்ந்த சகாக்கள் நிறுவன அறிவை வழங்குகின்றனர். இவ்விரு பலங்களையும் ஒருங்கிணைப்பது அவசியமாகும்.

இப்பாடம் இந்திய விண்வெளித் துறையையும் தாண்டி விரிவடைகிறது. பாரிய தேசியத் திட்டங்களுக்குத் தெளிவான நோக்கங்கள், தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு, உரிமை உணர்வு மற்றும் கற்றல் கலாசாரம் ஆகியவை தேவை. ‘ககன்யான’, ‘பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்’, அதிநவீன ஏவுகணைகள் மற்றும் எதிர்கால நிலவுப் பயணங்களுக்குப் பாரிய அளவிலான திறன்களும்; அரசாங்கம், பொது நிறுவனங்கள், தொழில்துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மையும் அவசியமாகும்.

















