லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் காந்தி சிலை உள்ளது. இந்த சிலை தியான நிலையில் காந்தி இருப்பதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒரு அடையாளமாகவும் போற்றப்படுகிறது.
ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி இங்கு கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்த விவரத்தை அறிந்த இந்தியத் தூதரகம் இந்தச் செயல் ஒரு வெட்கக்கேடானது என்று கடும் கண்டத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்தியத் தூதரகம் தமது எக்ஸ் வலைத்தளப் பக்கப் பதிவில்,
லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையை நாசப்படுத்திய வெட்கக்கேடான செயலை மிகவும் வருத்தத்துடன் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அஹிம்சை தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு அஹிம்சை கருத்து மற்றும் காந்தியின் மரபு மீதான வன்முறைத் தாக்குதல்.
இது குறித்து உடனடி மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள அதிகாரிகளிடம் இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. சம்பவ இடத்தில் எங்கள் அதிகாரிகள் ஏற்கனவே சென்றுவிட்டனர். சிலையின் கண்ணியத்தை காக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.


















