இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதியை நீதி அமைச்சு வழங்கியுள்ளது.
நிதி கிடைத்தாலும் தற்போது யாழ்ப்பபாணம், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என அகழ்வாய்வு நிபுணர்கள் கூறுகின்றனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ழுஆP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம் வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபா எங்களுக்குக் கிடைத்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், சட்டத்தரணிகள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் அகழ்வாய்வு நிபுணர்களுடன் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியைப் பார்வையிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அகழ்வாய்வு பணிக்குப் பொறுப்பான நிபுணர்கள் அகழ்வாய்வு நடைபெறும் இடத்தில் சில இடங்களில் ஏற்கனவே மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இந்த நாட்களில் அப்பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த நேரத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியாது என நீதவானிடம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை நவம்பர் 3 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதவான் தீர்மானித்துள்ளார்.


















