-சொ. வர்ணன்-
மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவேன் என ஜனாதிபதி கூறும் நிலையில் மக்களின் காணிகளை கடற்படை அபகரிக்கிறது. அப்படியானால் ஜனாதிபதியை விடவும் கடற்படைக்கு அதிகாரங்கள் அதிகமா? என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். வலி,வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணியை கடற்படை நிரந்தரமாக சுவீகரிக்க எடுத்துள்ள முயற்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஜனாதிபதியை விடவும் கடற்படைக்கு அதிகாரம், அதிகம் உள்ளதா? அல்லது ஜனாதிபதி வடக்கு மக்களை ஏமாற்றுகிறாரா? என்ற கேள்வி பலருக்கு எழுந்திருக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என உறுதியளித்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றபோதும் மக்களின் காணிகள் மக்களுக்கு என வாக்குறுதியளித்தார். ஆனால் இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் மிகக் குறுகிய ஏக்கர் காணிகளை மட்டுமே விடுவித்துள்ளார்கள்.
கடந்த அரசாங்கங்களைபோல வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றும் நாடகமாகவே பார்க்க முடிகிறது. யுத்தம் நிறைவடைந்து 30 வருடங்களைக் கடந்துள்ள நிலையில் இன்றும் தமது பூர்வீக நிலங்களுக்குள் மக்கள் செல்ல முடியாத அவல நிலையில் இருக்கின்றனர்.
அண்மையில் ஜனாதிபதிச் செயலகம் முன் வலி,வடக்கு மக்களை தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தை நடத்திய நிலையிலும் தற்போது கடற்படை தமது தேவைக்காக தனியார் காணியை அபகரிக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது. அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது சர்வாதிகாரப் போக்கில் செயற்படுவது அனைவரும் அறிந்த விடயம். குறிப்பாக வலி வடக்கு தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் புதிய கட்டுமானங்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
ஆகவே தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும் இலங்கையை ஆட்சி பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் என்றைக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வராது – என்றார்.


















