-இ.கலைஅமுதன்-
யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு கோரி அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில் சில மாதங்களுக்கு முன்பாக தையிட்டி விகாரைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எட்டப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணப்படும் என வலிவடக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கை எடுப்பது இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.
2 மாதத் தவணை நிறைவடைந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பிலான நடவடிக்கை குறித்துக் கேள்வி எழுப்பி அமைச்சரவைக்கு கடிதம் அனுப்ப பிரதேசசபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பதிலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்மானிக்கப்படவுள்ளது.


















