தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு வருடம் கடந்தும்; வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை இதுவரை விடுவிக்கவில்லையென வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. இந்நிலையில் வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுடைய காணிகள் இதுவரை விடுதலை செய்யவில்லை.
ஏற்கனவே கடந்த காலத்தில் ஆட்சியாளர்களால் விடுவிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்த காணிகளையே இந்த அரசாங்கம் விடுவித்துள்ளது.
தேசியத் தேர்தல்களின் போது மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் வாக்குறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த அரசாங்கம் காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு 764 இலக்க பேருந்து வழித்தடத்தினை முற்றாகத் திறந்து விட்டு காணிகளை விடுவித்ததாக சர்வதேசத்திற்கு காண்பிக்கின்றது.
மக்களுடைய காணிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வளையப்பகுதியில் இருப்பதால் காணி உரிமையாளர்கள் அயல் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் தொடர்ந்தும் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
மக்கள் தொடர்ந்து காணிகளுக்காக போராடி வருகின்றனர். எனவே இந்த அரசாங்கம் மக்களுடைய காணிகளை விடுவித்து தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
தற்போது இந்த அரசாங்கம் தமது காணிகளை விடுவிக்கப்படமாட்டாதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என தெரிவித்தார்.


















