பொலிஸ் விசாரணையில் சிக்கியது ஆதாரம்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் கைத்துப்பாக்கிகள் உள்ளனவா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொலைபேசியில் இன்னொரு நபரிடம் இருந்து கைதுப்பாக்கியை படம் எடுத்து பகிரப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது:-
அண்மையில் நல்லூர் அரசடிப் பகுதியில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு நெருக்கமானவர் என அறியப்படும் நபர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவரின் தொலைபேசியில் சில சட்டவிரோதச் சம்பவங்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தவருடைய கைபேசிக்கு அவருடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை படம் எடுத்து whatsapp மூலம் அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைத்துப்பாக்கியின் புகைப்படத்தை அனுப்பிய நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் தெற்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர் என்றும், அக் கட்சி சார்பில் கடந்த கால தேர்தல்களில் போட்டியிட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் உத்தரவுகளை பெற்று அவரை கைது செய்து விசாரணை நடாத்துவதற்கான முன்னெடுப்புக்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















