வீட்டின் உரிமையாளர்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது பிரதேச சபையின் முன் அனுமதியைப் பெற்று மேற்கொள்ளுமாறு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்டவர்கள் தமது கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் போது பிரதேச சபையின் முன் அனுமதியைப் பெறுவதுடன், அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ள வேண்டும்.
இல்லையேல், தாங்கள் முன் அனுமதியை எடுக்காமலோ அல்லது அனுமதியை மீறியோ கட்டுமான பணிகள் நடைபெறுவது எங்களுக்கு தெரியவந்தால், அக்கட்டிடத்தை உடனடியாக அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தாங்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிடுவதுடன் பொருளாதார நட்டமும் ஏற்படும்.
இதேவேளை, கரவெட்டி பிரதேசத்தில் பலர் பம்பஸ் பாவிக்கிறார்கள். ஆனால் சிலர் முறையாக அதனை அகற்றுவதில்லை. எமது பிரதேசத்தை அழகாக, சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் விரும்புகின்றோம். சிலர் அதனைக் குழப்பும் வகையில் முறையாக அகற்றாது வீதியோரங்களில் எறிந்து முறையற்ற செயற்பாட்டை மேற்கொள்கின்றனர். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எமது பிரதேச சபையால் குப்பைகளை பெறுவதில் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப தங்களது குப்பைகளை சேமித்து வைத்து எமது குப்பைகளை பெறும் வாகனங்களில் முறையாக அகற்றுங்கள். இதனால் எமது கிராமம் அழகான கிராமமாக காட்சியளிக்கும்.
தற்போது எமக்கு மின்விளக்குகள் குறைவாக கிடைக்கப் பெற்றுள்ளன. இதனை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொருத்தி வருகின்றோம். அடுத்த பட்ஜெட்டில் இதற்கான நிதியை ஒதுக்கவுள்ளோம். எனவே தங்களது வட்டார பிரதிநிதிகள் ஊடாக எமக்கு தெரியப்படுத்துமிடத்து மின் விளக்குகள் பொருத்தக் கூடியதாக இருக்கும் என்றார்.


















