-மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பம்-
மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக வடக்கு – கிழக்கில் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்து அலங்கரிக்கும் பணிகளை பொதுமக்கள் ஆரம்பித்திருக்கின்றனர்.
படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் துப்புரவுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாயம் செய்த மாவீரர்களை போற்றி அஞ்சலிக்கும் மாவீரர் நாள் இம்மாதம் 27ஆம் திகதி, வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மாவீரர் வாரமாக அறிவிக்கப்பட்டு, 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்படும். அவ்வாறே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துயிலும் இல்லங்களிலும், படையினரின் முகாம்கள் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு அருகில் உள்ள பிரத்தியேக இடங்களிலும் துப்புரவுப் பணிகள், கடந்த 1ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், திருகோணமலை – சம்பூர் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் நேற்று முதல் பொதுமக்கள் சிரமதானப் பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர். கடந்த வருடத்தைபோல் மாவீரர் நாள் நினைவேந்தல் சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















