வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் மாணவர் உயிரிழந்தபோது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாக உயிரிழந்த மாணவரின் சகோதரி வானொலி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















