-சுகாதார அமைச்சரை சந்தித்த பிலிப் வார்டு உறுதி-
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டு மற்றும் அரசாங்க நட்புறவு அதிகாரி முஸ்தபா நிஹ்மத் ஆகியோர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்து கலந்துரையாடினர்.
2023 – 2027 ஆம் ஆண்டிற்கான உலக உணவுத் திட்டத்தின் பிரதான திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கும், அதன் மூலம் சரியான ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குவதற்கும் உலக உணவுத் திட்டம் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுக்கு சரியான சந்தையை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


















