-கஜிந்தன்-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவின் விசேட சந்திப்பு வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
குறித்த சிவில் பாதுகாப்பு குழு கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது செயற்பாடற்று காணப்படுகின்றது. அதனை மீண்டும் செயற்பட வைக்கும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஒவ்வொரு செயற்றிட்டம் ஆரம்பிக்கும் போதும் மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் கூட்டங்களை மட்டும் நடாத்துவதோடு நின்றுவிடாமல் மக்கள் கூறுகின்ற பிரச்சினைகளை பொலிஸார் தட்டிக் கழிக்காமல் முழுமையாக கிரகித்து விட்டு அதற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிவில் பாதுகாப்புக் குழுவினர் முன்வைத்தனர்.
ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.


















