வடக்கு மாகாணத்தில் 2009க்கு முன்பு இவ்வாறான போதைப்பொருள் பாவனையும், திட்டமிட்ட குற்றச் செயல்களும் காணப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் பற்றி தற்போது இலங்கையிலே முக்கிய பேசுபொருளாக உளளது. உண்மையிலே இந்த இரண்டும் ஒரு நாட்டுக்கு பெரும் சவால் விடுக்கின்ற விடயமாக காணப்படுகின்றன. அதனாலேயே அரசாங்கம் இதற்கான தீர்க்கமான முடிவை மேற்கொண்டிருக்கின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதி தலைமையிலே சுகததாச உள்ளரங்கிலே இவற்றை தடுப்பதற்கான செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
தற்போது இலங்கையை பொறுத்தவரை போதைபொருள் பாவனை, விற்பனை, பரிமாற்றம் போன்ற விடயங்கள் மிகவும் முக்கியத்துவமாக காணப்படுகின்றன.
ஆரம்பத்திலே இலங்கை கணிசமான அளவிலே போதைப்பொருள் பாவிக்கக்கூடிய நபர்கள் இருக்கின்ற ஒரு தேசமாக இருந்தது. அதன் பிற்பாடு இலங்கையை போதைப்பொருள் பரிமாற்ற நிலையமாக போதைப்பொருள் மாபியாக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். தற்பொழுது அதுக்கு மேலாக சென்று போதைப்பொருளை உற்பத்தி செய்கின்ற அளவுக்கு மிக மோசமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
உண்மையிலே இந்த போதைப்பொருள் மாபியாக்கள் கடந்த கால அரசாங்கங்களினாலும், அரசியல்வாதிகளினாலும் அரவணைக்கப்பட்டு அவர்களுடைய வழிநடத்தலில், அவர்களுடைய ஒத்துழைப்பின் பலனாகவே நாடு பாரதூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருள் வியாபாரிகள், பாடசாலை சிறுவர்கள், கல்வி
சமூகங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களையே அவர்களின் இலக்காக கொண்டு தங்களுடைய வியாபாரத்தை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் எதிர்கால இலங்கையை ஒரு இருள் மயமான சூழலில் தள்ளுவதற்கான இவர்களுடைய இந்த முயற்சி நிச்சயமாக பயனளிக்கப் போவதில்லை. அரசாங்கமும், நாங்களும் உறுதியாக இருப்பதோடு இந்த போதைப்பொருள் மாபியாக்களை ஒழித்துக் கட்டுவதற்கு எமது நாட்டு மக்களினுடைய பூரண ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















