-த.சுபேசன்-
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் மருத்துவர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு, அம்மாவட்ட பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற மாகாணமட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடலின் போதே பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள்
மேற்கண்ட கோரிக்கையினை விடுத்து மேலும் தெரிவிக்கையில்: பெரிய ஒரு நிலப்பரப்பைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு மருத்துவ சேவையை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வழங்கி வருகின்றது. இவ்வாறான நிலையில் இந்த வைத்தியசாலை பாரிய வளப்பற்றாக்குறையுடன் செயற்படுகின்றது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரி இல்லையென்பதுடன் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஒருவர் மாத்திரமே 24 மணி நேரமும் கடமையாற்றுகின்றார். அதே நேரம் குழந்தை நல மருத்துவ நிபுணர் ஒருவர் மட்டுமே பொறுப்பில் இருக்கின்ற நிலையில்; அவருக்கும் தற்போது இடமாற்றம் கிடைத்துள்ளது.
இவ்வாறானதொரு நிலைமையில் முல்லைத்தீவு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக விபத்தில் சிக்கி ஒருவர் இறந்த பின்னர் அவருடைய உடலினை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி மருத்துவ அறிக்கை பெற்ற பின்னரே உடலை உறவினர்களுக்கு வழங்கும் நடைமுறை காணப்படுகின்றது. இதனால் உறவினர்கள் பெரும் சிரமங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர்.
இதனை விட 24 மணி நேரமும் ஒரே வைத்தியர் கடமையாற்றுவதால் அவருக்கு உடல் மற்றும் உள ரீதியான தாக்கங்கள் நிச்சயமாக ஏற்படும். எனவே, வைத்தியசாலையின் வெற்றிடங்களுக்கு ஏற்ப பொருத்தமான மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகின்றோம் என்றனர்.


















