எமது கட்சி மீதான காழ்ப்புணர்ச்சி அல்லது அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்றே சமூக ஊடகங்களில் பொய்ப்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது தலைமைக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2026 பேராளர் மாநாடு மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது.
கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையிலே முகநூல்களிலும் சில இணையத்தளங்களிலும் எமது கட்சிக்கு எதிரான அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையில் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக ஆராய்ந்திருந்தோம்.
பொதுவாக கடந்த கால தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பின்னராக பல தடவைகள் எங்களுடைய கட்சி கூடி ஆராய்ந்துள்ளது. எங்களுடைய மாவட்ட ரீதியான, தொகுதி ரீதியான, வட்டார ரீதியான கட்சி கட்டமைப்பையும் அதேபோன்று தலைமைக் குழுவில் இளைஞர்களுக்காக இடைவெளியை அதிகரித்து புதியவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் நாங்கள் எடுத்திருக்கிறோம்.
பேராளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள கட்சி உறுப்பினர்களின் கைகளிலே தான் அந்த விடயங்களை கையளிப்போம். பேராளர் மாநாட்டை ஜனவரி 2026 க்குள் நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களின் உறுப்பினர்களையும் ஒருங்கமைத்து இது சம்பந்தமான முடிவுகளை எட்டி எங்களுடைய கட்சியை மேலும் பலப்படுத்திக்கொண்டு பயணிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கிறோம்.
அத்துடன் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சம்பந்தமான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை தான் அந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால் அதைப்பற்றி சரியாக படித்து சரியான விடயங்களை ஆராய்வதற்கான கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. ஆகவே மீண்டும் எங்களுடைய தலைமைக்குழு இணைய வழியின் ஊடாக கூடி அந்த பட்ஜெட் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கும்.
எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் நாங்கள் பங்கேற்பது தொடர்பாக கலந்துரையாடல் எதனையும் மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு அதற்கான அழைப்பு வரவும் இல்லை. அதில் நாங்கள் கலந்துகொள்வதும் சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


















