-அரச அதிபர் பிரதீபன் தெரிவிப்பு –
-சொ.வர்ணன்-
அண்மையில் திறக்கப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக் கொண்டவர்கள் அவற்றை உரிய முறையில் பயன்படுத்தாது போனால் வெளியாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட மட்ட விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 20 கடைகள் காணப்படுகின்ற நிலையில் அதனை பெற்றவர்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். பலர் கடைகளை திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கிடைத்துள்ள நிலையில் கடைகளை வழங்குமாறு வெளிமாவட்டங்களில் இருந்து கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது.
ஆகவே கடைகளை பெற்றவர்கள் அதனை பயன்படுத்தா விட்டால் பிரதேச செயலாளர் ஊடாக குறித்த கடைகளை மீளப் பெற்று வெளியாட்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

















