-செ.ரவிசாந்-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து முன்னெடுத்த 82ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை கணபதி மஹால் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத் தலைவர் பா.வீரசுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் தொடர் மழைக்கு மத்தியிலும் 71 ஆண்கள், 19 பெண்கள் என 90 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.


















