-பா.பிரதீபன்-, -சொ.வர்ணன்-
யாழ். பல்கலைக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அவயவங்களை இழந்த 35 பேர் மாற்று அவயவங்கள் பொருத்துவதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே ஒரு தொகுதியினர் சென்றிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கொண்ட குழு நேற்று சென்னை சென்றுள்ளது.
கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப் பங்களிப்புடன் யாழ். பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் இந்தத் திட்டம் வடக்கு- கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட குழவினர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த 35 பேர் கொண்ட குழு சென்னை சென்றுள்ளது.
யுத்தம் மற்றும் இதர பிரச்சினைகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழ்வோரின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் 35 பேருக்கும் சென்னை ஸ்பாக் மிண்டா’ நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.


















