-செ.ரவிசாந்-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் வலிகாமம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
பிற்பகல் 12.30 மணியளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மல்லாகம் காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் நினைவாலயம் முன்பாகப் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்கள் மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு பிரதான உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பிரித்தானியா வாழ் தாயக உறவுகளின் ஆதரவுடன் மாவீரர்களுக்கான கௌரவிப்பும் மதியபோசன உபசாரமும் இடம்பெற்றது.


















