யாழ்ப்பாணம் – காரைநகர் மேற்கு வீதி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் மிக சிரமத்தின் மத்தியில் பயணித்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்
காரைநகரின் மிக முக்கியமான வீதியாக குறித்த வீதியினாலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் காரைநகர் கடற்கரைக்கும் செல்ல வேண்டி உள்ளது.
அத்தோடு வெள்ள நீர் தேங்கியுள்ள இந்த வீதியின் அருகில் வங்கிகள், வைத்தியசாலை, பாடசாலை, தபால் நிலையம் ஆகியன அமையப் பெற்றுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


















