இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போதே, இதன் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இது தொடர்பில் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன்; குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குப் பின்னரே, மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரமானந்தம் என்ற ஒருவர் இதைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இடையீட்டு மனுக் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ளதாக எமது தரப்பு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்காகவே, நேற்று முன்தினம் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டோம். எமது ஆட்சேபனையின் பிரதான கருப்பொருள் இந்த வழக்கை காலம் கடத்த எதிராளிகளால் திட்டமிடப்படுகிறது என்பதேயாகும். எனினும் மாவட்ட நீதிபதி விடுமுறையில் இருப்பதால் வழக்கு எதுவும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. இதன் காரணமாக வழக்கு எதிர்வரும் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.


















