-யாழில் இரண்டாவது மரணம்-
-சி.ஜெகதீஸ்வரன்-
எலிக்காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்டுவில் வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் யோகேஸ்வரன் (வயது-68) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
கடந்த 22 ஆம் திகதி வயலுக்கு சென்றுவந்த நிலையில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நாட்டு வைத்தியம் செய்த நிலையில் உடற்சோர்வு காரணமாக வெள்ளிக்கிழமை காலை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
உடற்கூற்று பரிசோதனையில் எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.


















