-கொட்டிய குப்பையுடன் தலைதெறிக்க ஓடினார்-
-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணத்தில் பொது இடத்தில் குப்பையை கொட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்ற யாழ். மாநகர சபையின் ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) உறுப்பினர் ஒருவர் பொதுமக்களிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கந்தபுராண வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றது.
குப்பையை பொதியில் கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த மாநகர சபை உறுப்பினர் வீதியில் போட்டு விட்டு செல்வதை அவதானித்த அப்பகுதி மக்கள், குறித்த நபரை பிடித்ததுடன் கடும் எச்சரிக்கை செய்து குப்பையை மீண்டும் எடுத்துச் செல்ல வைத்தனர்.
குப்பைகளை அகற்றி பொது இடங்களை சுத்தமாக பேணுவதற்கு பொறுப்பாகவுள்ள மாநகர சபை உறுப்பினரே, குப்பையை திருட்டுத்தனமாக போட்டுவிட்டு செல்வதற்கு முயன்றமை பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். மாநகர சபையின் கடந்த அமர்வுகளின் போது, குறித்த உறுப்பினர் சுத்தம், சுகாதாரம் என பல வியாக்கியானங்களை சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


















