-தவிசாளர் தியாகராஜா நிரோஷ்-
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய எம்மை பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்தனர். பொலிஸாரின் இம்மிலேச்சத்தனமான, பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதரகங்களிடமும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களிடமும் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரியுள்ளார்.
இலங்கையில் எமக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகள், நாம் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பை எதிர்த்த வேளை இடம்பெற்ற தாக்குதல்கள் என்பதால் இலங்கை அரச கட்டமைப்பினால் ஒருபோதும் நீதி கிட்டாது என்பதை நாம் உணர்கின்றோம். அரச கொள்கையும் சட்டங்களும் சட்ட அமுலாக்கமும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு வலுச்சேர்ப்பவையாகவே பேணப்படுகின்றன. யாரும் எதிராக அமையக்கூடாது என்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பே இலங்கையில் நடைமுறையில் உள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும் மாற்றமின்றி இந்நிலை தொடர்கின்றது. பௌத்த பேரினவாத விஸ்தரிப்பிற்கு எதிராக கடந்த காலத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் கூட இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
வலிகாமம் வடக்கு பிரதேசசபை ஏகமனதாக முன்னெடுத்த சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் அகிம்சை வழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப் போராட்டத்தில் நீதிமன்றின் உத்தரவுகளை மதித்தே நாம் போராடினோம். அவ்வாறாகப் போராடிய போது எம்மீது பொலிஸார் பிரயோகித்த சித்திரவதைகள், மனித நாகரீகத்திற்கு ஏற்புடையதல்லாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள பிரதான நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனங்கள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தாபனங்கள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமைகள் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தாபனங்களுக்கும் இவ்விடயம் பற்றி போதிய ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


















