உயிலங்குளம் வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியால் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தினார்.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள உயிலங்குளத்திற்கான பிரதான வீதியாக உயிலங்குளம் காட்டுப்பகுதியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாரிய இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய சுமார் 800 மீற்றர் வரையிலான குறித்த வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியால் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தியதுடன் அவ்வீதியை அமைப்பதற்கான நிதி தேவை எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் உயிலங்குளம் வீதியை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை அமைச்சர் ஆனந்த விஜயபால வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கோரியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் விவாதிக்கப்பட்டது.
உயிலங்குளம் குளக்கட்டின் கீழ்பகுதியால் போக்குவரத்து வீதியை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே, குளக்கட்டின் கீழ்ப்பகுதியால் சுமார் 800 மீற்றர் வரையான வீதியை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் துணுக்காய் பிரதேச செயலர் பதிலளிக்கையில் குளக்கட்டின் கீழ்பகுதியால் வீதி அமைப்பதானால் வயல்காணி மற்றும் தனியார் மேட்டுக்காணி ஒன்றையும் ஊடறுத்தே இந்த வீதிணை அமைக்க முடியும்.
அண்மையில் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் இந்த வீதி தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இவ்வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியினால் அமைப்பதற்கு உரிய தரப்பினரிடமிருந்து காணியைப் பெற்றுக்கொள்ளுமாறும் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.அந்தவகையில் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்குள் இவ்வீதியை அமைப்பதற்குரிய காணி வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு எம்மால் பெற்றுக் கொடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.


















