-ஆட்சியாளர்களிடம் அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை-
தையிட்டி விகாரையில்; ஜனவரி 3ம் திகதி இடம்பெறவுள்ள புத்தர் சிலை வைக்கும் செயற்பாடு தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி இன்னுமொரு இன வன்முறைக்கு வித்திடும் என்பதால் இதனை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டுமென சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெபரிவித்திருப்பதாவது:
சட்டவிரோத கட்டிடமான திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் இந்து மத குரு உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டாலும்; போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கை, போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்த விதம் சிங்கள பௌத்தத்தின் கோர முகத்தினை வெளிக்காட்டுகின்றது.
அது மட்டுமல்ல இனவாத மதவாதத்தினை இல்லாமல் செய்வோம் என அடிக்கடி அலங்கார வசனம் பேசும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் அகோர முகத்தினை வெளிக்காட்டி நிற்கின்றது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதே.
தையிட்டி விகாரை நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு இன அமைதிக்கு எதிரானது மட்டுமல்ல தமிழர்களுக்கு எதிரான இன்னொரு சுற்று இன அழிப்பு போருமாகும்.
அன்று முப்படைகள் செய்ததை இன்று அவர்களின் துணையோடு பௌத்த மகா சங்கம் நேரடியாக களத்தில் இறங்கி வெளிப்படையாகவே செய்வதாக தோன்றுகின்றது. தேசிய மக்கள் சக்தியும் அவர்களின் காலடியில் விழுந்து அரசியல் செய்வதாக தமிழ் மக்கள் உணர்கின்றனர்.
இந்நிலையில் தற்போதைய சட்டவிரோத விகாரையின் பிக்குவிற்கு அரச ஆதரவோடு பதவி உயர்வு கொடுப்பது என்பதும் எதிர்வரும் புது வருடத்தில் ஜனவரி 3ம் திகதி அவ் விகாரை அமைந்திருக்கும் மக்களுக்கு சொந்தமான காணியில் புத்தர் சிலை வைக்க மகா சங்கத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதற்கான பாதுகாப்பை கோரி இருப்பது தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி இன்னுமொரு இன வன்முறைக்கு வித்திடும் கொடூர செயலுமாகும்.
இதனை ஆட்சியாளர்கள் உணர்ந்து அதனை தடுத்து நிறுத்துமாறும் கேட்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















