-சுரேஷ் பிரேமச்சந்திரன்-
வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களில் அடாத்தாகப் பிடித்த பல காணிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் புத்தகோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பொழுது ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இவற்றைத் தடுத்து நிறுத்தாமல் சட்டவிரோதமாகக் கட்டப்படும் புத்த விகாரைகளை இன்னும் ஆதரித்து செயற்பட்டு வருகின்றது.
தையிட்டியில் விகாரை தொடர்பில் நயினாதீவில் இருக்கும் நாகவிகாரையின் விகாராதிபதி, இந்தக் காணிகள் விகாரைக்கு உரித்தானதல்ல என்பதையும் அதில் கட்டப்பட்டிருக்கும் விகாரை சட்டவிரோதமானது என்பதையும் தமிழ் மக்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்களல்லர் என்பதையும் அவர்கள் தம்முடன் அன்புடன் பழகுகிறார்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கின்றார்.
அத்துடன் ஐம்பத்து மூன்று வருடங்களாக தாம் இந்தப் பிரதேசத்தில் வசித்து அந்த மக்களுடன் பழகிவருகிறேன் என்ற அடிப்படையிலும் தையிட்டி நாகவிகாரை கட்டுமானமானது சட்டவிரோதமானது என்றும் சிங்கள மக்களுக்கு சிங்கள மொழிமூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கின்றார்.
இதேவேளை, சட்டவிரோதமான விடயங்களை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் சட்டரீதியாக அந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கொடுப்பதை விடுத்து, தொடர்ந்து அந்த மக்களுடன் பேரம் பேசுவதும் வேறிடத்தில் காணிகள் தருகிறோம் என்று கூறுவதும் சட்டவிரோதத்திற்குத் துணைபோவதாகவே பொருள்கொள்ளப்படும்.
ஒருபுறத்தில் சமத்துவம், சகோதரத்துவம், இனங்களுக்கிடையில் ஐக்கியம் பற்றிப் பேசும் அரசாங்கம், இவ்வாறான நடவடிக்கைகளுக்குத் துணைபோவதென்பது நீங்கள் பேசுகின்ற விடயங்களை நிர்மூலமாக்குமே தவிர, நாட்டில் ஐக்கியத்தை உருவாக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.


















