-காணி உரிமையாளர்கள் அர்ச்சுனாவுக்கு அறிவுரை-
-இ.கலைஅமுதன், சொ.வர்ணன்-
தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை நிருபிக்கட்டும் என தையிட்டி காணி உரிமையாளர்கள் சவால் விடுத்தனர்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-
சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களின் காணிகளை அர்ச்சுனா பெற்றுக் கொடுக்க வேண்டாம். நீங்கள் எதிர்காலத்தில் இங்கு போட்டியிட்டும் வெல்லப் போவதில்லை. நீங்கள் தென் இலங்கையை நோக்கி நகரப் போகிறீர்கள். தையிட்டி மக்களின் காணிகள் பற்றி தேவையில்லாத கதைகளை சொல்ல வேண்டாம்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தையிட்டி பிரச்சினையை அலசி ஆராய வேண்டும். எத்தனை பரப்பு ஒரு ஏக்கர் என்று தெரியாத ஒரு வழக்கறிஞரும், எல்லோரையும் எத்தனையாம் தரம் படித்தார்கள் என்று கேட்கிற பாராளுமன்ற உறுப்பினரும் தையிட்டிக்கு வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.
போராட்டத்தின் நிமித்தம் பிக்கு இறங்கி வந்திருக்கிறார். கொஞ்ச காணியை விட்டு ஏமாற்றி விட நிற்கிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு போய் பேசுகிறார்.
நாங்கள் போராடுவதாகவும், கத்துவதாகவும் வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் போராடியே அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார் என்பதை மறந்துவிடக் கூடாது.
நேரம் ஒரு நேரம் உளறாமல் செயல்படுங்கள். கதைக்கும் போது நிதானமாக கதைக்க வேண்டும். உங்கள் வார்த்தை தடுமாறுகிறது. தமிழர் மரபை மீறி கதைக்கின்றீர்கள். கலாசாரத்தை மீறி கதைக்கின்றீர்கள். ஆட்களை தனிப்பட்ட ரீதியாக தாக்க வேண்டாம். உங்கள் மீது மதிப்பு உள்ளது என்றனர்.


















