-நல்லூர் பிரதேசசபை அமர்வில் தீர்மானம்-
-பா.பிரதீபன்-
நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சகல உறுப்பினர்களையும் அழைக்காவிட்டால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானத்தை தவிசாளர் ம.மயூரன் சபைக்கு முன்மொழிந்த நிலையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தவிசாளர் கூறுகையில்,
நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோருடன் வேறு கட்சிகளின் இரு உறுப்பினர்கள் பங்குபற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.
ஆக, கட்சி சார்பில் பிரதிநிதிகளை அழைத்து பிரச்சனைகளைக் கேட்பதற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒன்றும் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பான கூட்டம் அல்ல. அது மக்களின் குறை நிறைகளைத் தீர்க்கின்ற, பிரதேசங்களினை அபிவிருத்தி செய்கின்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.
எனவே, அதில் மக்களைப் பிரநிதித்துவப் படுத்துகின்ற அத்தனை மக்கள் பிரதிநிதிகளும் பங்குபற்றுதல் அவசியமானது. அப்போது தான் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் மக்கள் சார், பிரதேசம் சார்ந்த பிரச்சனைகளையும் தேவைகளையும் தெவித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு வலுச்சேர்க்க முடியும்.
எனவே நல்லூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு கட்சி சார்பில் பிரதிநிதிகளை அழைப்பதை விடுத்து நல்லூர் பிரதேசசபையின் உறுப்பினர்கள் அனைவரையும் பங்குபற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்காது ஒரு முழுமையற்ற வெறும் கண்துடைப்பிற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடப்படுமாயின் அதனை நல்லூர் பிரதேசசபையின் தவிசாளர், உப தவிசாளர் உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்காமல் முற்றாகப் புறக்கணிக்கின்றோம் – என்றார்.


















