-அன்ரனி திலக்-
அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார்.
தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மாரிகாலம் என்று அழைக்கப்படும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் இந்தக் காலப்பகுதியில் கடலில் நீராடுபவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
பொலிஸார் மற்றும் கடற்றொழில் அமைச்சருடன் கலந்தாலோசித்து விட்டு கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்படும்.
தாளையடி கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாங்கள் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு பாதுகாவலர்களை பணியில் அமர்த்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.


















