-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்-
-சி.ஜெகதீஸ்வரன்-
யார் யாரெல்லாம் இந்த மக்களுக்கு அநீதி இழைத்தார்களோ அனைவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். கடந்த காலங்களில் நடந்த அத்தனை விடயங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய தேவை இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்தார்.
பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் சமூக அபிவிருத்திக் குழுவின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது தொடர்பில் ஊடகவியளாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது அரசாங்கமோ ஜனாதிபதியோ முன்னெடுக்கும் செயற்பாடு அல்ல. அது நீதித்துறை முன்னெடுக்கும் விசாரணை.
யுத்த காலத்திலே ஆயிரக் கணக்கான ஆயுதங்கள் பரிமாறப்பட்டு அவை பாதாள உலகக் குழுக்கள், துணை ஆயுதக் குழுக்கள், ஏனைய குழுக்கள் அல்லது வேறு அமைப்புக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அந்த வகையில்தான் துப்பாக்கி விடயம் சம்பந்தமாக ஈ.பி. டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். அது இலங்கை நீதித் துறையால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விடயம். அது தொடர்பான விசாரணைகளை நீதித்துறை முன்னெடுக்கும். அது சம்பந்தமாக மேலும் மேலும் பல தகவல்கள் அறியப்பட்டு அது தொடர்ச்சியாக செல்லும்.
ஆனால் உங்களுக்கே தெரியும் கடந்த காலங்களிலே பல நூற்றுக்கணக்கான கொலைகள், கடத்தல்கள், கப்பம் கோரல், போதவஸ்து கடத்தல் என்பன இடம்பெற்றுள்ளன. இதற்கு ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ளார்கள். வேறுவேறு விடயங்களுக்கும் பயன்படுத்தி உள்ளார்கள். எனவே எங்களுக்கு இவரை காப்பாற்ற வேண்டும் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற தேவை கிடையாது.
இந்த நாட்டிலே அமைதி நிலை நாட்டப்பட வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். யார் யாரெல்லாம் இந்த மக்களுக்கு அநீதி இழைத்தார்களோ அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
கடந்த காலங்களில் நடந்த அத்தனை விடயங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டிய தேவை இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.


















