-நிஷாந்தன் கோரிக்கை-
-சொ.வர்ணன்-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள வேண்டுமென யாழ். மாநகர சபை உறுப்பினரும் தமிழத் தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரான சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.
யாழ். ஊடகாமையத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில்; பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று பாதாள குழுக்களின் கைகளில் சென்றமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது கைது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும் பொலிஸார் இராணுவத்தை காட்டிக்கொடுத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.
இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தி நிற்கின்றது.
இராணுவத்தின் போர் குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை தமிழர் தரப்பு எதிர்பார்க்கின்ற நிலையில் முன்னாள் அமைச்சரின் வாக்குமூலங்கள் இதற்கு ஆதாரமாக கொள்ளலாம்.
ஆகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள வேண்டும் என்றார்.


















